திருவொற்றியூர்-தண்டையார்பேட்டை இடையே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். ரெயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கோளாறை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டிக்கு இடையே செல்லும் மின்சார ரெயில்களில் தினமும் தொழிலாளர்கள், மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இன்று காலை 8.30 மணிக்கு திருவொற்றியூர்- தண்டையார்பேட்டை வ. ஊ. சி நகர் அருகே சிக்னலில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கமாக வந்த ரெயில்கள் திருவொற்றியூரில் இருந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரயில்வே பொறியியல் பிரிவுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சிக்னல் கோளாறு குறித்து ஆய்வு செய்தனர்.
இதன் காரணமாக மாற்று லைனில் படிப்படியாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது. மேலும் சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் தாமதமாகவே சென்றது. மின்சாரம் துண்டிப்பு காரணமாக சிக்னலில் கோளாறு ஏற்பட்டு பின்னர் தானாக சரி ஆகியதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து ரெயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.