தமிழக செய்திகள்

இரவில் பிரேத பரிசோதனை செய்ய கூடாதா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது' என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் உடல்களை இரவோடு இரவாக எதற்காக பிரேத பரிசோதனை செய்தார்கள்? பகலில் தான் பிரேத பரிசோதனை செய்யவேண்டும், இரவில் செய்யக்கூடாது என்று விதிகள் இருப்பதாக இணையத்தில் த.வெ.க. ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இந்த கேள்விக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், "கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது' என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT