தமிழக செய்திகள்

ஈரோடு மாநகர பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு - 4 ஆயிரம் லிட்டர் குறைக்கப்பட்டதாக புகார்!

கொள்முதல் பாதிப்பால் கடந்தசில நாட்களாவே விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆவின் நிறுவனம் சித்தோடு பகுதியில் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால், ஆவின் நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தினசரி ஒன்றரை லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதில் பாக்கெட் பால் விற்பனை தவிர்த்து தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆவின் பாலக முகவர்கள் நல சங்கத்தின் செயலாளர் அய்யாசாமி கூறியதாவது:

ஈரோடு ஆவின் விற்பனை செய்யும் பால் முழுமையாக முகவர்கள் மூலமாகவே விற்பனை செய்யப்படுகிறது. பால் முகவர்களாகிய நாங்கள்தான் பால் பூத்துகள் மூலமாகவும், கடைகள் மூலமாகவும் பால் விநியோகம் செய்து வருகிறோம். வழக்கமாக முகவர்களுக்கு 49 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 10 நாட்களாகவே ஒவ்வொரு முகவருக்கும் சுமார் 12 லிட்டர் கொண்ட 7 டிரே பால்வரை குறைவாக விநியோகம் செய்யப்படுகிறது. இதை கணக்கிட்டால் ஒட்டு மொத்தமாக சுமார் 5 ஆயிரம் லிட்டர் பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

கடைக்காரர்கள் கேட்கும் அளவுக்கு எங்களால் பால் விநியோகம் செய்ய முடியவில்லை. ஆவின் நிறுவனத்தில் கேட்டால் அதிகாரிகளும் உரிய பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டோம். அதற்கு, ஈரோட்டில் கொள்முதல் விலை உயர்வு காரணமாக இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது தற்காலிகம், விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு ஆவின் நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது என முகவர்களுக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது. இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இதுபோன்று பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை. என கூறியுள்ளார்.

சித்தோடு பகுதியை சேர்ந்த விவசாயி சிவசுப்பிரமணியன் கூறியதாவது:

கோடை காலத்தில் பால் உற்பத்தி குறைவதால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைவது வழக்கம். ஆனால், தற்போது தீவின தட்டுப்பாட்டால் பால் உற்பத்தி குறைந்திருக்கிறது. அதே நேரம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் தொகையை விட தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலை கொடுப்பதால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து இருக்கிறது.

இதனால், ஆவினில் இருந்து பால் விநியோகம் குறைந்திருப்பது உண்மை. அதுமட்டுமின்றி, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் இருந்து சென்னைக்கு தினசரி 50 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. தற்போது பால் தட்டுப்பாடு காரணமாக ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வெண்ணெய், நெய் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஈரோடு ஆவின் பொது மேலாளர் அமிர்தலிங்கம் கூறியதாவது:

ஆவினில் பால் தட்டுப்பாடு எதுவும் இல்லை. தினசரி 64 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்கிறோம். திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் 66 ஆயிரம் லிட்டர் வரை விநியோகம் செய்யப்படும். இதுவரை தட்டுப்பாடு இல்லை” என்றார்.