தமிழக செய்திகள்

சென்னை மாநகர பஸ்சில் அதிர்ச்சி வாசகங்கள்- எதிரியை சிக்க வைக்க திட்டம் போட்ட ரவுடி கைது

தொடர்ந்து போலீசார் பஸ்சில் விக்கியின் பெயரை குறிப்பிட்டு எழுதியது யார்? என்பதை பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

கொடுங்கையூரில் இருந்து அண்ணாசதுக்கம் இடையே இயக்கப்படும் மின்சார பேருந்தில் தான் ஜாகீர் உசேன் இதுபோன்று எழுதி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னையில் ரவுடிகள் தங்களுக்கு இடையே இருக்கும் பகையை தீர்த்துக் கொள்வதற்காக மாறி மாறி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம். பழிக்குப் பழியாக ஒருவரையொருவர் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி பல கொலை சம்பவங்களையும் சென்னை ரவுடிகள் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

போட்டுக் கொடுப்பார்கள்

தங்களுக்கு எதிரியாக இருக்கும் ரவுடிகளை பற்றி தவறான தகவல்களையும் அவர்கள் செய்யும் குற்றச்சம்பவங்களையும் போலீசுக்கு ரவுடிகள் போட்டுக் கொடுப்பதும் உண்டு. இதனால் ஏற்படும் பகை பெரிய அளவில் மோதலாக உருவெடுத்து இதற்கு முன்னர் பல்வேறு அடிதடி சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படி ரவுடிகள் தங்களது எதிரிகளை காலி செய்வதற்கு பல்வேறு வழிகளையும் கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ரவுடி ஒருவர் தனது எதிராளியை மாட்டி விடுவதற்காக மாநகர பஸ்சில் அரிவாள் படத்தை வரைந்து கொலை செய்ய வேண்டுமா? போன் செய்யுங்கள்... என்று எழுதி எதிரியின் செல்போன் நம்பரையும் பதிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மாநகர பேருந்து ஒன்றின் இருக்கையின் பின்புறம் இப்படி ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது.

கொலை செய்ய வேண்டுமா?

“விச்சி வியாசர்பாடி ரவுடி கொலை செய்ய வேண்டும் என்றால் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்” என குறிப்பிட்டு செல்போன் எண்ணும் அதில் எழுதப்பட்டிருந்தது.

இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து எம்.கே.பி. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பஸ்சில் எழுதப்பட்டிருந்த எண்ணை தொடர்புக் கொண்டு பேசிய போது, அது வடசென்னை பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவரது செல்போன் எண் என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் விக்கி, “சார்... என்னுடைய போன் நம்பரை நானே எப்படி பொதுவெளியில் எழுதி போடுவேன்... அதுவும் கொலை செய்வதற்கு எண்ணை தொடர்புக் கொள்ளுங்கள் என்று யாராவது போன் நம்பரை எழுதி போடுவார்களா..? என்று போலீசாரை பார்த்து கேட்டுள்ளார். எனக்கு பிடிக்காத யாரோதான் இதனை செய்துள்ளனர். அவர்களை கண்டுபிடியுங்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் பஸ்சில் விக்கியின் பெயரை குறிப்பிட்டு எழுதியது யார்? என்பதை பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

கேமரா

மாநகர பேருந்தில் இருந்த கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது விக்கியை மாட்டி விடுவதற்காக வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற ரவுடி இதுபோன்று பேருந்தில் விக்கியின் செல்போன் எண்ணை எழுதி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜாகீர் உசேனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 33 வயதான அவர் மீது 10 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொடுங்கையூரில் இருந்து அண்ணாசதுக்கம் இடையே இயக்கப்படும் மின்சார பேருந்தில் தான் ஜாகீர் உசேன் இதுபோன்று எழுதி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கோர்ட்

ஜாகீர் உசேனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து பஸ்களில் இதுபோன்று தேவையில்லாமல் எழுதுகிறார்களா? என்பதையும் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT