கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று பூக்களின் விலை கிடுகிடுவன உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர் பூக்காரத் தெரு மற்றும் தொல்காப்பியர் சதுக்கத்தில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் லாரிகளில் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதே போல் இங்கிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர ஏராளமான பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
பொதுவாக பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகம் என்பதால் அந்த சமயங்களில் அதன் விலையும் கணிசமாக அதிகரிக்கும். மேலும் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.
இந்த நிலையில் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பூஜைகள் நடைபெறும். இதற்கு பூக்களும் தேவை வழக்கத்தை விட அதிகம் தேவைப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று பூக்களின் விலை கிடுகிடுவன உயர்ந்துள்ளது. அதன்படி கனகாம்பரம் பூ பல மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனையாகின.
இதேபோல் முல்லை ரூ.1100, செவ்வந்தி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.300, சம்பங்கி ரூ.300, செண்டி ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.200, அரளி ரூ.500, கோழி கொண்டை ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து பூ வியாபாரி குமரேசன் கூறும்போது, பொதுவாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். அதன்படி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. நாளை இதை விட விலை அதிகமாக இருக்கும் என்றார்.