சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து பணிக்கு செல்கிறார்கள். வடகிழக்கு காற்று குவிதல் மற்றும் சாரல் மழை காரணமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு பனிப்பொழிவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு புயல்களை உருவாக்கி ஆந்திர மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்றாவதாக உருவாக இருக்கும் புயல் தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அது திசை மாறி ஆந்திரா செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி வானிலை ஆய்வாளர்கள் மழை மற்றும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. சென்னையை ஒட்டி உள்ள தாம்பரம் ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் மாலை 6 மணியிலிருந்து பனி பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே இந்த பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் நேற்று இரவு பனியின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது. தாம்பரம், பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அம்பத்தூர் செங்குன்றம் புழல் முதல் சுற்று வட்டார பகுதிகளிலும் இரவு நேரங்களில் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டுதான் மக்கள் பணிக்கு செல்கிறார்கள். அந்த அளவுக்கு பனிப்பொழிவு மிகவும் அதிகமாகவே உள்ளது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் வீடுகளில் கடும் குளிர் காணப்படுகிறது. இதனால் வீடுகளில் மின் விசிறிகளை அணைத்துவிட்டு தான் பொதுமக்கள் தூங்குகிறார்கள்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்திரனிடம் கேட்டபோது, வடக்கு-வடகிழக்கு காற்று குவிதல் காரணமாக பனி மூட்டத்துடன், சாரல் மழை பதிவானதாகவும் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இரவு/அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
புறநகர் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்த போதிலும் சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதன் தாக்கம் கடுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.