தமிழக செய்திகள்

வீடு புகுந்து டிராவல்ஸ் நிறுவன ஊழியரை கடத்திய 7 பேர் கைது

தனிப்படை போலீசார் பரத் சூர்யாவின் வீட்டிலிருந்து கார் சென்ற சாலையில் உள்ள அனைத்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

காட்டுமன்னார்கோவிலில் வீடுபுகுந்து கடத்தப்பட்ட வாலிபரை 20 மணி நேரத்தில் மீட்டு, அவரை கடத்தியவர்களையும் கைது செய்து, நடவடிக்கை எடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள எள்ளரி கிராமத்தை சேர்ந்தவர் பரத்சூர்யா (வயது23).

டிராவல்ஸ் நிறுவன ஊழியர்

இவர் சென்னையில் உள்ள வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காரைக்குடியை சேர்ந்த அபிராஜ் என்பவர் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல இவரை அனுகியுள்ளார்.

இதையடுத்து பரத் சூர்யா, அபிராஜிடம் ரூ.7 லட்சம் பெற்றுக் கொண்டு அவரை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு அபிராஜூக்கு அந்த வேலை மற்றும் சம்பளம் சரியில்லை எனக்கூறி வேலையை விட்டு விட்டு ஊருக்கு திரும்ப வந்துவிட்டார்.

பணம்

ஊருக்கு வந்தவுடன் பரத் சூர்யாவை, அபிராஜ் தொடர்பு கொண்டு, என்னை தாங்கள் அனுப்பிய நிறுவனம் பேசிய சம்பளமும் தரவில்லை. பேசிய வேலையும் தரவில்லை. அதனால் இந்தியாவுக்கு திரும்ப வந்து விட்டேன். எனவே நான் கொடுத்த பணத்தை எனக்கு உடனடியாக திருப்பித் தர வேண்டும் என கேட்டார். இதையடுத்து அபிராஜ், பரத் சூர்யாவின் வீட்டிற்கு சென்று தான் கொடுத்த ரூ.7 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பரத் சூர்யா, விசா, விமான டிக்கெட் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும், தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், பணம் கிடைத்ததும் மீதமுள்ள தொகையை திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பின்பு பரத் சூர்யா சென்னைக்கு செல்லாமல் ஊரிலேயே தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அபிராஜ், பரத்சூர்யாவை தொடர்பு கொண்டு பல தடவை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தார்.

கடத்தல்

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை பரத் சூர்யா தனது உறவினர்களுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருந்து 7 பேர் கும்பல் திபுதிபுவென இறங்கி பரத்சூர்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் தூங்கி கொண்டிருந்த பரத் சூர்யாவை அவர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு வெளியில் வர முயன்றனர். இதனை பார்த்த பரத் சூர்யாவின் மனைவி யுவராணி மற்றும் மாமியார் ஆகியோர் தடுக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அவர்களை தள்ளிவிட்டு பரத் சூர்யாவை தாங்கள் வந்த காரில் கடத்தி சென்று விட்டனர்.

தனிப்படை

இதுகுறித்து யுவராணி காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாபு அறிவுரையின் பேரில் சப்-புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் பரத் சூர்யாவை கடத்திய கும்பலை பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பரத் சூர்யாவின் வீட்டிலிருந்து கார் சென்ற சாலையில் உள்ள அனைத்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த காட்சிகளை வைத்தும், வாலிபரை கடத்தி செல்ல பயன்படுத்திய கார் எண்ணை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.

7 பேர் கைது

இந்த நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் போலீசார் அங்கு சென்று அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரத் சூர்யாவை கடத்தியது அபிராஜ் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வாலிபரை கடத்தியதாக, காரைக்குடியை சேர்ந்த அபிராஜ்(24), அவரது தந்தை சுப்பிரமணியம்(50), கார் டிரைவர் பிரபு(30), கணேசன் (40), வினித் (22), நாகராஜன் (25), காளீஸ்வரன் (26) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

போலீசார்

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுமன்னார்கோவிலில் வீடுபுகுந்து கடத்தப்பட்ட வாலிபரை 20 மணி நேரத்தில் மீட்டு, அவரை கடத்தியவர்களையும் கைது செய்து, நடவடிக்கை எடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT