டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனுவிற்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் எவ்வித இடைக்கால உத்தரவோ அல்லது முன்ஜாமினோ வழங்கிவிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான ஒப்பந்தங்கள், பார் டெண்டர்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் ரூ. 17 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறி, செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் முக்கிய தகவல்களுக்காக செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்யவேண்டியது அவசியம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றம் முன்ஜாமினைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், இவ்வழக்கில் தங்களது தரப்பு வாதத்தை கேட்கும் வரை செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.