கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது19). இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து கொண்டே மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் சட்டம் படித்து வருகிறார்.
இவருக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த 22வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வருடமாக இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது சினிமா தியேட்டர், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் ஜோடியாக காதலர்கள் இருவரும் சுற்றி திரிந்தனர். இதற்கிடையே திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் காதலன் சசிகுமாரை விட்டு மாணவி பிரிந்து சென்றுவிட்டார்.
ஆசை காதலி பிரிந்து சென்றதால் அவரை மறக்க முடியாமல் தனிமையில் தவித்து வந்த சசிகுமார் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மாணவியை பின் தொடர்ந்து சென்று "என்னை விட்டு பிரிந்து சென்ற நீ இதுவரை என்னிடம் வாங்கிய ரொக்கம் மற்றும் நான் உனக்கு செலவு செய்த பணத்தையும் சேர்த்து திருப்பி கொடு" என்று கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவி தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று சசிகுமாரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டின் அறையில் சசிகுமாரை அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். காதலியால் பணத்தையும் நிம்மதியையும் இழந்து தாக்குதலுக்கு உள்ளாகி மனம் நொந்து போன சசிகுமார் அங்கிருந்து தப்பி வந்து தன்னை கடத்தி தாக்கிய மாணவி மற்றும் அவரது நண்பர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரபிக் உசேன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.