கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அரசு மவுனமாக இருப்பது ஏன் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் அந்த எம்.எல்.ஏ. பாவம். வாட்ஸ்அப் தகவல்களை வைத்து பெரிதுபடுத்தக்கூடாது என்று காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார். ஆனால் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் எம்.எல்.ஏ.வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுவதுதான் இப்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது.
ஒரு மாநிலத்தில் கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்கள் என்ன நினைப்பார்கள்? கலெக்டரின் வீட்டில் சென்று தொந்தரவு செய்ததாக ஒரு தகவல் கூறுகிறது.
இன்னொரு தகவல் அவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இவற்றை பார்க்கும் போது பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள், பெண்களை தாயாக நினைக்கும் இங்கேயே பெண்களுக்கு இப்படிப்பட்ட நிலைமையா? என்று நினைப்பார்கள் அல்லவா. அந்த அடிப்படையில்தான் எங்கள் பெண் எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். அவர்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.
பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருப்பதால், அரசை மீறி எதுவும் சொல்ல முடியாது. எனவே மவுனமாக இருக்கலாம். இந்த நிலையில் தலைமை செயலாளரோ அல்லது முதலமைச்சரோ நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அரசு மவுனமாக இருப்பது ஏன்? மவுனத்தை கலைத்து நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.