தமிழக செய்திகள்

கோடை கால முன்னெச்சரிக்கை... ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - செல்வப்பெருந்தகை

வீடுகளில் சிறிய தீயணைப்பு கருவி வைத்திருப்பது பாதுகாப்பான நடைமுறையாகும்.

மாலை மலர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையால் தீ விபத்துகள், வெப்பஅலை பாதிப்புகள் மூலம் உயிர்கள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்கம்பிகள், மின்சாதனங்கள் பாதுகாப்பான நிலையிலுள்ளனவா என பரிசோதனை செய்ய வேண்டும். ஓவர்லோடு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தீப்பெட்டி, பட்டாசு போன்ற பொருட்களுடன் விளையாடுவதை கண்காணிக்க வேண்டும். காடு மற்றும் வெளிப்புற பகுதிகளில் சிகரெட் துண்டுகள் போன்றவற்றை அலட்சியமாக எரிவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் சிறிய தீயணைப்பு கருவி வைத்திருப்பது பாதுகாப்பான நடைமுறையாகும்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட தீயணைப்பு துறைகள் கோடை கால சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தீயணைப்பு வாகனங்கள், நீர்த் தொட்டிகள் மற்றும் அவசர உபகரணங்கள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி அவசர எண்கள் பற்றிய தகவலை பரப்ப வேண்டும்.

வெடி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெப்பநிலை கட்டுப்பாடு, பாதுகாப்பான சேமிப்பு மற்றும் மின்கசிவு தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அரசு விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வெப்பஅலை எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். காடுகளில், தீ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

கோடை காலத்தில் அலட்சியமாக இருப்பது பேரழிவிற்கு வழிவகுக்கும். ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் தீ விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இவ்விழிப்புணர்வு அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.