சேகர்பாபு 
தமிழக செய்திகள்

இடைத்தேர்தலை வைத்து உதயநிதி ஸ்டாலினுக்கு த.வெ.க சவால் விடுவதா?- சேகர்பாபு கண்டனம்

ஏறத்தாழ 48 ஆண்டுகளாகப் பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். என்னுடைய பொதுவாழ்க்கையின் வயதுகூட அவருக்கு இல்லை.

திருவண்ணாமலையில் பேசிய முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுகளை மறுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தியதும், கோயில் மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்ததும் திராவிட மாடல் அரசே என வலியுறுத்தினார். திமுக இயக்கத்தின் 78 ஆண்டுப் பயணத்தை மிரட்டும் பாணியில் பேசும் ஆதவ் அர்ஜூனாவின் சவால் மடமையை காட்டுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திராவிட மாடல் அரசு

“100 நாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக பணிகளும் சம்பளமும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத்தொகை, தகுதியுள்ள சிலருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் மதுராந்தகம் மக்கள் முன்வைக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் திருக்கோவிலின் கிழக்கு கோபுரப் பணிகளாக இருந்தாலும் சரி, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் வீரவசந்தராயர் மண்டபப் பணிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு மண்டபங்களின் திறப்பு விழாக்களாக இருந்தாலும் சரி, அவற்றுக்கான அடித்தளத்தை அமைத்து, வளர்த்து, நிறைவேற்றுவதற்கான நிலைக்குக் கொண்டு வந்தது திராவிட மாடல் அரசு.

எனக்கு அறிவு இருக்கிறாதா என்று அமைச்சர் கேட்கிறார். ஏறத்தாழ 48 ஆண்டுகளாகப் பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். என்னுடைய பொதுவாழ்க்கையின் வயதுகூட அவருக்கு இல்லை.

மடமை

இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று உதயநிதிக்கு ஆதவ் அர்ஜூனா சவால் விடுகிறார். நாம் ஒன்றும் யுத்த களத்தில் நிற்கவில்லை. ஜனநாயக ரீதியில் அரசியல் செய்கிறோம். சட்டமன்றத்திலும் வெளியேயும் அடிதடியையும் ஒருவரையொருவர் மோதிக்கொள்வதையும் தூண்டி விடும் வேலையையும் ஆதவ் அர்ஜூனா செய்து கொண்டு இருக்கிறார். நீ அந்த கேட்டை தாண்ட மாட்டாய் இந்த கேட்டை தாண்ட மாட்டாய் என்கிறார். திமுக பல காட்டாறுகளையும் நெருப்பாறுகளையும் தாண்டி வந்த இயக்கம்.

தமிழக அரசியல் களத்தில் 78 ஆண்டுகள் பயணித்து இருக்கிற ஒரு இயக்கத்தை மிரட்டுகிற பாணியில் ஆதவ் அர்ஜூனா ஈடுபடுவது அவரது மடமையை காட்டுகிறது.

எப்போதெல்லாம் திமுகவுக்கு சோதனை வருகிறதோ எப்போதெல்லாம் இந்த இயக்கம் இப்படி சிறுமைப்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் சினம் கொண்டு சிங்கமாக இந்த இயக்கமும் தொண்டர்களும் மாறுவார்கள்.

இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

SCROLL FOR NEXT