சென்னையில் நேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் குறித்தும் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு சீமானுக்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தேர்தல் முடிவுக்கு பிறகு அண்ணன் சீமான் கட்சியின் வாக்கு சதவீதம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. காரைக்குடியில் அண்ணனும் டெபாசிட் இழந்துவிட்டார். இந்த தோல்வியால்தான் அவர் புலம்ப ஆரம்பித்துள்ளார்.
எதிர்காலம் எங்கே கொண்டுபோய் சேர்க்குமோ? என்று தெரியாமல் புலம்புகிறார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டிற்கு சென்றதும் உதயநிதிக்கு காவடி தூக்க ஆரம்பித்துவிட்டார்.
சீமான் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டது. அந்த கடுமையான சூழலிலும் 4.7 சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தோம். அப்போது தி.மு.க. படுதோல்வி அடைந்தது.
அதன்பிறகு 2016, 2019 தேர்தல்களில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருந்தோம். அந்த தேர்தலில் ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்று நாங்கள் கேட்காமலேயே தி.மு.க. அறிவித்தது.
அதற்கு காரணம் ராகுல் மீது இருக்கும் நன்மதிப்பு, ஓட்டாக மாறும் என்பது தி.மு.க.வுக்கு தெரியும். நினைத்தது போல் நடந்தது. தி.மு.க. ஆட்சியும் அமைந்தது. அதற்கு நாங்களும் ஒரு காரணமாக இருந்தோம்.
சீமான் அவர்களே, நீங்கள் போட்டியிட்ட 4 முறையும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளீர்கள். நான் மக்களால் தேர்வு செய்யப்பட்டவன். என்னை தி.மு.க. வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக கூறுகிறீர்கள். அப்படியானால் காங்கிரஸ் வாக்குகளால் வெற்றி பெற்ற உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.
நீங்கள் காவடி தூக்கும் உங்கள் தம்பி உதயநிதி ராஜினாமா செய்த மறுநாளே நானும் ராஜினாமா செய்து விடுவேன். தமிழக முதலமைச்சர் விஜய் தன்னந்தனியாக நின்றுதான் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இன்னும் அவருக்கு ஆதரவு பெருகிக் கொண்டு இருக்கிறது.
ஊழல் இல்லாத நிர்வாகம் கண்ணுக்கு தெரிகிறது. நெடுஞ்சாலை துறையில் 36 சதவீதம் கமிஷன் பெற்றது தடுக்கப்பட்டு உள்ளது. பத்திரப்பதிவு துறையில் ஒரு ஏக்கருக்கு ரூ.7 லட்சம் வாங்கியதும் நிறுத்தப்பட்டு உள்ளது. நகரமைப்பு துறையில் பணம் பறித்தது குறைந்து உள்ளது.
இப்படி ஒவ்வொரு துறை வாரியாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கடந்த காலங்களில் எவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்பது தெரியுமா? அதை பற்றி எல்லாம் பேசியவர்தான் சீமான்.
ஆனால் மேளதாளத்தோடு அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டிற்கு சென்றது முதல் தடம் புரண்டுவிட்டார்.
இப்போது தான் எங்களுக்கும் புரிகிறது அனிதா ராதாகிருஷ்ணன் ஏன் அவரது வீட்டிற்கு சீரோடு சென்று சிறப்பு செய்தார் என்பது. சீமான் அவர்களே, இருக்கும் கடையை காப்பாற்றிக் கொள்ள பாருங்கள். தி.மு.க.வுக்கு ஜிங்ஜாங் போடுவதை கைவிடுங்கள். இந்த வீராவேசம், வெங்காயமெல்லாம் பேச எங்களுக்கும் தெரியும்.
எங்களை பார்த்து உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா? என்கிறீர்கள். நாங்கள் அளவோடு உப்பையும் சேர்த்து தான் சாப்பிடுகிறோம். நிறைய உப்பு போட்டால் உடம்புக்கு ஆகாது. ரத்த அழுத்தம் அதிகமாகி மூளை பாதித்துவிடும் பார்த்து கொள்ளுங்கள். 140 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி இதேபோல் எத்தனையோ பேரின் டிராமாக்களை பார்த்து இருக்கிறது.
காங்கிரசுக்கு சுயபலம் இருக்கிறது. சுய கவுரவமும் இருக்கிறது. முன்பு 3-வது பெரிய கட்சியாக இருந்தோம். இப்போது 4-வது பெரிய கட்சியாக இருக்கிறோம். நீங்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை விட்டு அகன்று வருகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.