காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தொகுதி வேட்பாளருமான சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆயிரம், ஐநூறு என பணத்தை வாங்கிக் கொண்டு வரிசையில் நின்று ஓட்டு போடுவது அல்ல அரசியல். உங்கள் மதிப்புமிக்க வாக்கை அநீதிக்கு எதிராக நீங்கள் தூக்க வேண்டும். பசி, பஞ்சம், கொலை, கொள்ளை, தீண்டாமை, அடக்குமுறை, போதை, பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக நீங்கள் வாக்குகளை தூக்க வேண்டும்.
இந்த கேடுகெட்ட முறையற்ற நிர்வாகம் ஜனநாயகத்தை கொன்று புதைத்து விட்டு கேடுகெட்ட பண நாயகத்தை வளர்த்திருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல் விதை ஊண்டப்படுகிறது. இந்த இடத்தில் மக்களுக்கான சேவை என்பது செத்து விழுகிறது.
ஜனநாயகம் செத்து விழுந்து கேடுகெட்ட பண நாயகம் பிறந்து விடுகிறது. இதனால் மக்களின் நலன் என்பதோ மக்களின் சேவை என்பதோ கேள்விக்குறியாகி விடுகிறது. வாக்குக்கு காசு கொடுக்கும்பொழுது அவர்களின் கையைப் பிடித்து கேளுங்கள், சேவை செய்யத்தானே தேர்தலில் நிற்கிறீர்கள் எனக்கு சேவை செய்ய எதற்காக காசு, இலவசம் அறிவிக்கிறீர்கள்.
ரூ.5 ஆயிரம் என்கிறீர்கள், டிவி,பிரிட்ஜ் கிரைண்டர் என்கிறீர்கள், இதெல்லாம் எங்கிருந்து வாங்குவீர்கள்.வாங்கும் பொழுது காசு கொடுத்து வாங்கினீர்களா. அவர்களும் உங்களுக்கு இலவசமாக கொடுத்தார்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.
காசு கொடுத்து தானே வாங்கினீர்கள் அந்த காசை எங்கிருந்து எடுத்தீர்கள். எங்கிருந்து எடுப்பீர்கள். இந்தக் கேள்வியை எழுப்பி விட்டால் ஜனநாயகம் உயிர் பெற்று விடுகிறது. மக்களாட்சி மலர்ந்து விடுகிறது. இங்கே பணம் இருப்பவன் தான் அரசியல் செய்யலாம் என்பதை உருவாக்கி வைத்தவர்கள் இந்த திருடர்கள்.
நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு ஹெலிகாப்டர் தருகிறேன் என்று சொல்லத் தெரியாதா? வீட்டுக்கு ஒரு மோட்டார் பைக், கார் எங்கிருந்து கொடுப்பாய். நான் ஒருவன் தான் சொல்கிறேன் இலவசம் தரமாட்டேன். இலவசத்திற்கு கையேந்த வைக்கும் நிலையில் உங்களை வைக்க மாட்டேன். நான் வேலை இல்லை என்ற சொல்லை ஒழிப்பேன்.
வறுமை, ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் ஒழிப்பேன். பசி என்ற சொல்லே இல்லாமல் ஒழிப்பேன். நடிப்பவன் தான் நன்றாக நாடாளுவான் என்று இன்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். நடிப்பவன் கடைசி வரை நடித்துக் கொண்டு தான் இருப்பான். வரலாற்றைப் படித்தவன் தான் வாழ்ந்தது எங்கே வீழ்ந்தது எங்கே என்று சரி செய்ய முயல்வான்.
இவ்வாறு அவர் பேசினார்.