மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து, தமிழக அரசின் செயல்பாடுகளை சீமான் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணியால் தமிழக உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், முதல்வரின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார் தொடர்ச்சியாக கூறி வருகிறார். தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என கூறும் காங்கிரஸ் தயவில்தான் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி செய்கிறது. எப்படி இதை அவர்களால் செய்ய முடிகிறது? உரிமையை பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தில் எதை அவர்களால் காப்பாற்ற முடியும்? மேகதாது விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால் நான் இதற்கு என்ன பதில் கூறுவேன்? நான் ‘ஹீரோ’ என கூறுபவரிடம் இதை கேளுங்கள்.
முதலமைச்சர் எதையும் பேச மாட்டார், ஆனால் செயலில் காட்டுவார் என கூறுகிறார்கள். அவர் காட்டிய செயல் ஏதாவது ஒன்றை கூற முடியுமா? செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எம்.எல்.ஏ., கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறும் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.
புகார் மனு அளிக்க வந்த நபரை துணை சபாநாயகர் தாக்கியுள்ளார். அந்த பொறுப்புக்கு தகுந்தது போல் அவர் செயல்படவில்லை. அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு கூட முதலமைச்சருக்கு துணிவில்லை. அவர் எப்படி தூய சக்தி என கூறுவார்?
பல பேரை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரால் எம்.எல்.ஏ.அருள் விக்னேஷை தகுதி நீக்கம் செய்ய முடியாதா? அவரை தகுதி நீக்கம் செய்து அந்த தொகுதியில் தேர்தல் வைத்தால் மீண்டும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் எப்படி தலைவர் . ‘மாஸ் லீடர்’ மக்களை சந்திக்க எதற்கு பயப்பட வேண்டும். வென்றால் தான் நாங்கள் களத்தில் இருப்போம், தோல்வி அடைந்தால் ஓடி விடுவோம் என இருப்பது நியாயமா? தோல்வி அடைந்தாலும் களத்தில் இருப்பவன் தான் வீரன். பெரும்பான்மை என்பது முக்கியமல்ல, உண்மையும் நேர்மையும் தான் முக்கியம் என்றார்.