தமிழக செய்திகள்

வாக்களிக்காமல் இருப்பதும் ஒருவித தேச துரோக குற்றம்தான் - சீமான் பேட்டி

வெளிநாட்டில் இருந்து வர முடியாதவர்களுக்கு தபால் வாக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை நீலாங்கரை ஸ்ரீகபாலீஸ்வரர் நகரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் தனது மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார். ஓட்டு போட்டவுடன் மை வைக்கப்பட்ட விரலை உயர்த்தி காண்பித்தார். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கிற கடைசி வலிமை என்பதும், கருவி என்பதும் வாக்குதான். அதை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தபிறகு 75 விழுக்காடு, 80 விழுக்காடு தான் பதிவாகிறது என்றால் வாக்கு செலுத்தாத உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு கேள்வி வருகிறது.

தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது இந்த நாட்டில் இருக்கிற ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இல்லையா என்கிற கேள்வி வருகிறது. தேர்தல் ஆணையம் 100 விழுக்காடு வாக்கு செலுத்த வேண்டும் என்று சொல்லுகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் குண்டு வைப்பது, கொலை செய்வது, வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து கணக்கில் காட்டாமல் மறைப்பது ஆகியவைதான் குற்றம், தேச துரோகம் என்பது இல்லை. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேச துரோக குற்றம்தான். ஜனநாயக துரோகம்தான். அதை என் மக்கள், என் சொந்தங்கள் செய்யக் கூடாது.

கற்றவர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எல்லோரும் நாம் ஒரு வாக்கு செலுத்தி என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. ஒவ்வொரு வாக்கிலும்தான் மாற்றம் வரும். அதனால் என்னில் இருப்பது தான் மாற்றம், உங்களில் இருப்பது தான் மாற்றம்.

நாம் எல்லோரும் வாக்கு செலுத்த வேண்டும். அது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். அதை தவறாமல் செய்யுங்கள் என்று நான் அன்பாக வேண்டுகிறேன்.

ஓட்டு போடுவதற்காக கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு பஸ் வசதி இல்லை. கோயம்பேடு பஸ் நிலையத்தில் வசதி குறைவு என்று யாரும் வீதியில் வந்து நிற்கவில்லை. போதுமான அளவு வசதி இருந்தது. இங்கிருந்து கிளாம்பாக்கத்துக்கு வெகுதூரம் போக வேண்டும். அது சிரமம்.

வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்கள் இங்கு வந்து வாக்களிப்பதை வரவேற்கிறேன். வெளிநாட்டில் இருந்து வர முடியாதவர்களுக்கு தபால் வாக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். என்னைப் போன்ற வேட்பாளர்களுக்கு தபால் வாக்கு போடுதவற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.