தமிழக செய்திகள்

5 தலைநகரங்கள், பெண்களுக்கு தனித்தொகுதி... NTK தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

மாலை மலர்

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே தனித்தே போட்டி, வேட்பாளர்கள் அறிமுகம் என தேர்தல் பணிகளில் நாம் தமிழர் கட்சியினர் பம்பரமாக பணியாற்றி வருகின்றனர். இதனை தொடர்ந்து தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில், 49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கையை சீமான் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* சென்னை, திருச்சி, கோவை, குமரி, மதுரை ஆகிய 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்.

* 3 சட்டமன்ற தொகுதிக்கு 1 பாராளுமன்ற தொகுதி என வலியுறுத்தப்படும்.

* குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வலியுறுத்துவோம். குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும், மக்களால் தேர்வு செய்யப்படாத எவரும் மக்களை ஆட்சி செய்ய அதிகாரமில்லை.

* மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சராகும் முறையை மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வர நாம் தமிழர் கட்சி போராடும்.

* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* நீதிமன்ற படிவங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* மாநில நீதிமன்றத்தில் அந்த மாநிலத்தவர் தலைமை நீதிபதியாக சட்டம்.

* வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை பெற்று தர ஏற்பாடு.

* இட படங்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 75 சதவீதம் கிடைக்க போராட்டம்.

* தூய தமிழ் மொழியில் மருத்துவ கல்வி கற்க ஏற்பாடு.

* பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித்தொகுதியை போல் பெண்களுக்கு தனித்தொகுதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும்.

* மின்னணு வாக்குப்பதிவு முறையை நீக்கிவிட்டு வாக்குச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும்.

* நன்கொடை ரசீது போல் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வாக்கு செலுத்தியவருக்கு அதற்கான ரசீது வழங்கப்படும்.

* மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.