தமிழக செய்திகள்

டெபாசிட் இழந்த சீமான்... 4% வாக்குகளை பறிகொடுத்த நாதக!

நாம் தமிழர் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளில் 4% இழந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 23ஆம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் யாரும் எதிர்பாராவிதமாக நடிகர் விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

திமுக கூட்டணி 72 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாதது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழின மீட்சி, மாநிலத் தன்னுரிமை, இயற்கை வேளாண்மை, மற்றும் தமிழை அதிகார மொழியாக்குதல் போன்றவற்றை முதன்மை கொள்கைகளாக முன்னிறுத்தி பேசிவந்த நாம் தமிழர் இத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.

குறிப்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெபாசிட் கூடப் பெறாமல், காரைக்குடி தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். மேலும் மாநில கட்சி அங்கீகாரத்தையும் நாதக இழந்துள்ளது.

கடந்த தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர், இந்த தேர்தலில் 4 சதவீதத்துக்குள் சுருங்கியுள்ளது.

2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாதக, 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்ற நிலையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

அப்போது சீமான் உள்பட போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவம் தோல்வியடைந்தாலும், கட்சிக்கு 1.7 சதவீத வாக்குகள் கிடைத்தது. அதன்பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 2.15 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

2019 மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி 3.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. மேலும் 22 இடைத்தேர்தல்களில் 3.15 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியாக உருவானது. எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்துப் போட்டியிட்டு இதை சாதித்தது.

இதனைத்தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்றது. இந்நிலையில் இத்தேர்தலில் 4 சதவீத வாக்குகள் நாதகவிற்கு சரிந்துள்ளது. இதற்கு நாதகவின் இளைஞர்கள் ஆதரவு தவெகவிற்கு சென்றதே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.