தமிழ்நாட்டில் காலியாக உள்ள பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.
ஏற்கனவே மதுராந்தகம், தாராபுரம், தொகுதிகளுக்கு கடந்த மாதம் (அக்டோபர்) நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 தொகுதியையும் தமிழக வெற்றி கழகம் கைப்பற்றியது. தி.மு.க. 2-வது இடத்துக்கு வந்தது. அ.தி.மு.க.வுக்கு 3-வது இடம் கிடைத்தது.
இந்தநிலையில் எஞ்சி உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அனேகமாக வரும் டிசம்பர் 20-ந்தேதிக்குள் 5 தொகுதி இடைத்தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தநிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தனக்கு ஆதரவு தந்தால் அதை ஏற்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
பசும்பொன்னில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, இடைத்தேர் தலில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆதரவு அளித்தால் ஏற்பீர்களா? என்ற கேள் விக்கு பதிலளித்த சீமான், “பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல அவன் என்ன பைத்தியக்கா ரனா? அவர்கள் ஆதரவு தந்தால் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த ஆதரவை ஒரு தேர்தல் ஆதரவாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் கூட்டணியாகக் கருதக் கூடாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவதாகவும், மக்கள் தன்னை சட்டமன்ற உறுப்பினராகப் பார்க்க ஆசைப்படுவதால் அம்பாசமுத்திரம் இடைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்த சமயத்தில் சீமானுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா என்று தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, இடைத் தேர்தல் தேதி முதலில் அறிவிக்கப்படட்டும். அதன் பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்” என்று பதில் அளித்திருந்தார்.
இதுபற்றி தி.மு.க. செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்த மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றியை தவறவிட்டது.
எனவே 5 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க.தான் போட்டியிடும். தேர்தலில் எங்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி.
த.வெ.க. ஆட்சியில் முதலமைச்சர் விஜய்க்கு நிர்வாக திறமை இல்லை என்பது மக்களுக்கு வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அவரால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை, சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எனவே 5 தொகுதி இடைத்தேர்தலிலும் இது எதிரொலிக்கும்.
சீமானைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்துக்கு எதிராக கட்சியை ஆரம்பித்து தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்தார். எனவே அம்பாசமுத்திரம் தொகுதியில் அவரை ஆதரிக்கும் எண்ணம் இல்லை.
எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் போது நாங்கள் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும்?
இவ்வாறு அவர் கூறினார்.