தங்கை வித்யா ராம்ராஜ் சாதனைப் பயணம் தொடரட்டும். உலக அரங்கில் தமிழரில் புகழ் ஓங்கட்டும் என்று ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு நாம் தமிழர் கட்சி சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 4×400 மீட்டர் தொடரோட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அன்புத்தங்கை வித்யா ராமராஜ் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், அன்பு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் வென்றிருக்கும் தங்கை வித்யா ராமராஜின் சாதனை அளப்பரியது. 4×400 மீட்டர் கலப்பு தொடரோட்டத்தில் வெள்ளிப்பதக்கம், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம், தற்போது மகளிர் 4×400 மீட்டர் தொடரோட்டத்தில் தங்கப்பதக்கம் என மூன்று போட்டிகளிலும் மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதிலும், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி, இந்திய தடகள வரலாற்றின் பெருமைக்குரிய வீராங்கனை பி.டி. உஷா அவர்கள் 42 ஆண்டுகளுக்கு முன்பு 1984ஆம் ஆண்டு பதிவு செய்த 55.42 விநாடி தேசிய சாதனையை, 2023ஆம் ஆண்டிலேயே சமன் செய்திருந்த தங்கை வித்யா ராமராஜ், தற்போது 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி அதனை முறியடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது தங்கை வித்யா ராமராஜின் சாதனைப் பயணத்தில் தனித்துவமான மகுடமாகும்.
கோவை மண்ணில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தங்கை வித்யா ராமராஜின் இந்த உயரம் வெறும் பதக்கங்களால் மட்டும் அளவிடப்படக்கூடியதல்ல.
வாகன ஓட்டுநராகப் பணியாற்றிய தந்தையின் உழைப்பும், தனது பிள்ளைகள் விளையாட்டில் உயர வேண்டும் என்று ஊக்கப்படுத்திய தாயின் கனவும், எண்ணற்ற பொருளாதாரச் சிரமங்களையும் தடைகளையும் கடந்து தொடர்ந்து பயிற்சி செய்த வித்யாவின் விடாமுயற்சியுமே இன்று அவரை ஆசியாவின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
வசதிகள் இருந்தால்தான் சாதிக்க முடியும்; வாய்ப்புகள் கிடைத்தால்தான் உயர முடியும் என்ற எண்ணங்களைத் தகர்த்து, “வறுமை தடையல்ல; விடாமுயற்சியும் இலட்சிய உறுதியும் இருந்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் உயரத்தை எட்ட முடியும்” என்பதை தனது வாழ்க்கையாலும் சாதனையாலும் மெய்ப்பித்திருக்கிறார் தங்கை வித்யா ராமராஜ்.
தான் களம் கண்ட ஒவ்வொரு போட்டியிலும் பதக்கத்தைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் அவரது சாதனை, குறிப்பாக விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கும் கிராமப்புற மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளம் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும். தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தங்கை வித்யா ராமராஜ் மிகச்சிறந்த முன்னத்தி ஏர்!
வெற்றி என்பது பணத்தால் வாங்கப்படுவதில்லை; வியர்வையால் வென்றெடுக்கப்படுகிறது! அதனைத் தனது ஒவ்வொரு ஓட்டத்திலும் உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் தமிழ்மகள் வித்யா ராமராஜ்.
ஆசிய விளையாட்டுக் களத்தில் மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டின் பெயரையும் இந்திய நாட்டின் பெருமையையும் உயர்த்தியுள்ள அன்புத்தங்கை வித்யா ராமராஜ் அவர்கள், எதிர்வரும் உலக தடகளப் போட்டிகளிலும் ஒலிம்பிக் களத்திலும் இன்னும் பல சாதனைகளைப் படைத்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென பேரன்போடு வாழ்த்துகிறேன்!
தங்கை வித்யா ராமராஜ் சாதனைப் பயணம் தொடரட்டும்! உலக அரங்கில் தமிழரின் புகழ் ஓங்கட்டும்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.