தொழிலதிபர் ஆர். வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட பரபரப்பான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு ஒன்பது வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் வீரமணி, மகேந்திர சிம்மன், சாந்தி, லாசர், கணேசன், சீனிவாசன், சக்திவேல், பாபு, பார்த்திபன் மற்றும் பெருமாள் என்கிற பாலா ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது வழக்குகளில், சமீபத்திய குற்றப்பத்திரிகை நவம்பர் 23-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, நவம்பர் 11-ஆம் தேதியன்று முதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கிற்கான நீதிமன்ற விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், நவம்பர் 17-ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்பட்டன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தலைமறைவாக உள்ள பிரகாஷ் என்ற நபர் மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த பிடிவாரண்டை தொடர்ந்து, அவர் மீது 'புளூ கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.