சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்ட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். காலாண்டு விடுமுறையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெரும்பாலான நாட்கள் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பள்ளி மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலா வந்திருந்தனர்.
நகரின் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கோக்கர்ஸ்வாக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தற்போது கொடைக்கானலில் சாரல் மழை, குளிர், வெயில் என மாறி மாறி இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனை அனுபவித்தவாறு ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி மற்றும் நடை பயிற்சி மேற்கொண்டனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குறிப்பாக கேரள மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்திருந்ததால் ஏரிச்சாலை களை கட்டியது.
மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு ஆடு, முயல் ஆராய்ச்சி பண்ணை, எழும்பள்ளம் ஏரி, பசுமை புல்வெளி, சூழல் சுற்றுலா மையம், சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகமடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்ட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.