தமிழக செய்திகள்

சாத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 15-ந்தேதி முதல் மழை பெய்து வரும் சூழலில், வரும் நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இதுமட்டுமல்லாமல், வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது புயலாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வருகிற 26-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. 29 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனைய தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை வெளுத்து வாங்கியது.

மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சுற்று வட்டார சங்கரநத்தம், படந்தால், இருக்கன்குடி, சடையம்பட்டி, போத்திரெட்டிபட்டி, உப்பத்தூர், குமராபுரம், வெங்கடேஸ்வரபுரம், சிறுகுளம், கணபதியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.

வீட்டின் சுவர் இடிந்தது

இந்நிலையில், சாத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்தார்.

மேட்டமலை கிராமத்தில் நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 12-ம் வகுப்பு மாணவி முத்துச்செல்வி உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மாணவியின் தாயார் சோலையம்மாள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT