தமிழக செய்திகள்

ஆசிரியர்கள் ருசி பார்த்த பிறகு மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சமையலறை புகை, தூசி, நூலாம்படை இல்லாமல் தூய்மையாக எப்போதும் பராமரிக்கப்பட்டு வர வேண்டும்.

மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் பணியை தினமும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், சமையல் தரம், தூய்மை மற்றும் மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கையாக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலைப் பிறப்பித்துள்ளது. காலை உணவை பரிமாறுவதற்கு முன்பாக கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வருமாறு:-

சமையலறையில் சமையல் செய்யும் பொருட்கள் தவிரப் பிற பொருட்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

சமையலறை புகை, தூசி, நூலாம்படை இல்லாமல் தூய்மையாக எப்போதும் பராமரிக்கப்பட்டு வர வேண்டும். சமையல் செய்யும் பாத்திரங்கள் மற்றும் பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் நன்கு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.

சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்னர் அந்த உணவு அவர்களின் உடல்நலத்திற்கு உகந்த தரமான உணவு தான் என்பதை ஆசிரியர்கள் ருசி பார்த்து உறுதிசெய்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

சமையல் செய்த பின்னர் பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை முழுமையாக மூடி வைத்து, தேவைப்படும்போது மட்டும் திறந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

சமையல் செய்யும்போதும், சமைத்த பின்னர் பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில் பாதுகாப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் பணியை தினமும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வரவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT