தமிழக செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது.

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பு

சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.

இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தடை நீங்கியது

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணைக்கு அனுமதி

மேலும், முந்தைய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி அளித்தது. அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமின் இருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர்.