பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் முந்தைய திமுக அரசு மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கைதாகி பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் ஆந்திராவில் இருந்த சவுக்கு சங்கரை தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, குண்டர் சட்ட வழக்குகளை ஆய்வு செய்யும் ஆலோசனைக்குழு, அளித்த அறிக்கையின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
புரட்சித் தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்ட சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் சிறை வாசலில் சால்வை அணிவித்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து சிறை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும், நீதிமன்றங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் சவுக்கு சங்கர் கூறுகையில்,
திமுக ஆட்சியை தூக்கி எறிந்து, கொளத்தூரிலேயே திமுக தலைவர் ஸ்டாலினை மண்ணைக் கவ்வ வைத்ததன் மூலம் எனது மூன்றாண்டு காலப்பணி வீணாகவில்லை. தமிழ்நாடு மக்கள் அற்புதமான தீர்ப்பை வழங்கி உள்ளனர். இந்தத் தீர்ப்பை புரிந்து கொண்டு முதலமைச்சர் விஜய் தற்போது ஆட்சி புரிந்து வருவதை செய்தித்தாளில் படித்து தெரிந்து கொண்டேன். தமிழக வெற்றிக் கழகம் அமைத்துள்ள கூட்டணி ஆட்சி ஐந்தாண்டு காலம் முழுமையாக நிறைவு செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்பதே முதலமைச்சருக்கு தான் இந்த நேரத்தில் வைக்கும் கோரிக்கை.
குண்டர் சட்ட அறிவுரை கழகத்திற்கு சென்றால் அவர்கள் கொடுக்கும் ஆணை சிறைக்கு வர 8 நாட்கள் வரை தேவைப்படும். ஆனால் 2 நாளில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட ஆணையை விரைவாக வழங்க முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டதால் தான் விரைவாக விடுவிக்கப்பட்டேன். நாட்டில் என்ன நடந்தது என்பதை கடந்த 4 ஆண்டுகள் மக்கள் பார்த்ததால் மட்டுமே கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவினார். தன்னுடைய ஊழியர்கள் மிகுந்த துன்பத்தை சந்தித்தனர். தனது தாயார் அகால மரணம் அடைந்தார், இவை அனைத்தையும் முதலமைச்சர் விஜய் பார்த்திருப்பார். சென்னையின் முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிந்து எடுப்பார்.
முதலமைச்சர் விஜய் நேரம் கொடுத்தால் அவரை சந்திக்க தயாராக இருக்கிறேன். திமுகவைப் போன்று கொடூரமான ஒரு கட்சி எந்த காலத்திலும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்கள் ஆட்சியில் இருந்தபோதும் ஊடகங்களிடம் தான் அவர்கள் கோரிக்கை வைத்தார்களே தவிர, ஊடகவியலாளர்களை சிறைவைத்த கொடுங்கோல் அரசு திமுகவை போல வேறு ஏதும் கிடையாது. முதலமைச்சர் விஜய் ஊடகங்களில் வரும் ஒவ்வொன்றையும் கவனித்து திட்டங்களை செய்து வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால் ஜனநாயகம் மேலும் அதிகமாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளே தவறுகளை சுட்டிக் காட்டுவார்கள். ஊடக சுதந்திரம் இருக்கும்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சி காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. உணவு பாதுகாப்பு சட்டம் 100 நாள் வேலை என பல்வேறு திட்டங்கள் கூட்டணி ஆட்சியால் மட்டுமே சாத்தியமானதால், தற்போது தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி உள்ளதால் சிறப்பாக செயல்படுவார்கள். தமிழ்நாட்டில் சாதி, மதம் அனைத்தையும் கடந்து தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் காரணமாக முதலமைச்சர் எந்த சாதியை கண்டும் அஞ்சாமல், பட்டியல் இனத்தை சேர்ந்த 8 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார். நாட்டில் நடக்கும் அனைத்தையும் விஜய் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆலோசகர்கள் கவனித்து ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த ஆட்சியின் மீது தமக்கு நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது என்றார்.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கைது செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, அது அரசின் ரகசியம் தமக்குத் தெரியாது எனக் கூறினார். தமிழக வெற்றிக்கழக ஆட்சியை விமர்சிப்பீர்களா என்ற கேள்விக்கு, ஊடகவியலாளராக நெறி தவறாமல் தனது பணியை செய்ய வேண்டும் என்பது ஒரே குறிக்கோள் என்றும், கடும் நெருக்கடிகளின் போதே திமுக ஆட்சியை விமர்சித்தவன் என்றும் தற்போதும் விமர்சிப்பேன் என்றும் கூறினார். 5 மாதங்களில் திமுக ஆட்சி வரவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, கடந்த தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என ஸ்டாலின் கூறினாரே என்றும் அவருக்கு வயதாகி விட்டது விட்டு விடுங்கள் என்றும் தெரிவித்தார்.