விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையை மாரியப்பன் என்பவரும், மல்லாங்கிணற்றைச் சேர்ந்த வன்னி அரசின் சகோதரியான ஜெயசக்தியும் நடத்தி வருகின்றனர்.
மாவட்ட வருவாய்த் துறையின் உரிய உரிமத்துடன் இயங்கி வந்த இந்த ஆலையில் சிறு பட்டாசுகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஐந்து அறைகளைக் கொண்ட இந்த ஆலையில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (38) என்ற தொழிலாளி, வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் கலவை தயாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில், பட்டாசு ஆலையில் வேலை செய்யும் நபர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், அதிகப்படியான பட்டாசுகளை உற்பத்தி செய்ய சொன்னதாலும், வெடி விபத்தில் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யச் சொன்னதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களான சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, செல்வமாரியின் கணவர் முரளீஸ்வரன், ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியது, வெடிபொருட்களை கவன குறைவாக கையாண்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் சாத்தூர் தாலுகா போலீசார் ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷை கைது செய்ததுடன் தலைமறைவான மற்ற மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.