தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக 9 காவலர்களுக்கு நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு கடந்து வந்த பாதை:
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் நேர கட்டுப்பாட்டை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அங்கு இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் தந்தை-மகன் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்த நாளில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் தந்தை-மகன் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10பேர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் சிறையிலேயே உயிரிழந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நடந்த இந்த வழக்கில் தற்போது சி.பி.ஐ. 1500 பக்கங்கள் அடக்கிய குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணையின்போது சிறையில் இருந்த 9 காவலர்களும் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள் என சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 பேரும் சிறையில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு கூறினார்.
அதில் "ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 9 பேரும் குற்றவாளிகள். இவர்களுக்கு தண்டனை வழங்குவது சம்பந்தமாக சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர்களின் மனநலம், உடல்நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த மாதம் 30-ந்தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்" என நீதிபதி தெரிவித்திருந்தார்.
தண்டனை விவரம்
ஆனால் மத்திய, மாநில அரசின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படாததால் வழக்கின் தீர்ப்பு ஏப்.2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமும் தண்டனை விவரம் அறிவிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று (ஏப்ரல் 6) இந்த வழக்கில் குற்றவாளிகளான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார்.
அதன்படி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து, சாமிதுரை ஆகிய 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வாசித்தபோது பேசிய நீதிபதி "இது சாதாரண குற்றமல்ல. நிராயுதபாமியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தந்தை, மகன் ஆகியோரை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை மகனுக்கு செய்த கொடூரங்களை படிப்பதற்கே பதைபதைக்கிறது. இது அரிதினும் அரிதான வழக்கு.
கைது செய்யப்பட்ட போலீசாரால் யார் அதிகமாக அடித்தார்கள் என வேறுபாடு கட்ட இயலாது. வெறும் ஆயுள் தண்டனை வழங்கினால் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் இருக்காது." என்று தெரிவித்தார்.
தண்டனை முழு விவரம்:
முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை தூக்கு தண்டனை, 21 ஆண்டுகள் சிறை, ரூ. 84 லட்சத்து 10 ஆயிரம் அபராதம்,
இரண்டாவது குற்றவாளி, பாலகிருஷ்ணனுக்கு இரட்டை தூக்கு தண்டனை, 8 ஆண்டுகள் சிறை, ரூ. 84 லட்சத்து 10,000 அபராதம்,
மூன்றாவது குற்றவாளி ரவி கணேஷுக்கு இரட்டை தூக்கு தண்டனை, 18 ஆண்டுகள் சிறை, ரூ. 52 லட்சம் அபராதம்,
நான்காவது குற்றவாளி முருகனுக்கு இரட்டை தூக்கு தண்டனை, 11 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம்,
ஐந்தாவது குற்றவாளி சாமதுரைக்கு இரட்டை மரண தண்டனை 8 ஆண்டுகள் சிறை, ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,
ஆறாவது குற்றவாளி முத்துராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை, 11 ஆண்டுகள் சிறை, ரூ. 3,20,000 ரூபாய் அபராதம்.
ஏழாவது குற்றவாளி செல்லதுரைக்கு இரட்டை மரண தண்டனை, 8 ஆண்டுகள் சிறை தண்டனை,
எட்டாவது குற்றவாளி தாமஸ் பிரான்சிஸிற்கு இரட்டை மரண தண்டனை, 11 ஆண்டுகள் சிறை தண்டனை, 40 லட்சத்து 46,000 ரூபாய் அபராதம்.
ஒன்பதாவது குற்றவாளி வெயில்முத்துவுக்கு இரட்டை மரண தண்டனை, 8 ஆண்டுகள் சிறை, ரூ.10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.