மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் முழு விசாரணையும் முடிந்து கடந்த மாதம் 23-ந்தேதி மதுரை மாவட்ட கோர்ட்டு நீதிபதி முத்துக்குமரன், கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அவர்களுக்கு என்னென்ன தண்டனை விதிக்கப்படுகிறது என்ற விவரத்தை பின்னர் தெரிவிப்பதாகவும் இந்த தண்டனை குறித்து மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இந்த வழக்கு கடந்த 30-ந்தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கோரின. இதனால் இந்த வழக்கை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இன்று (வியாழக்கிழமை) மத்திய, மாநில அரசுகள் விரிவாக அறிக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில் 9 போலீஸ்காரர்களுக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.