தமிழக செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு - 9 காவலர்களும் குற்றவாளிகள்... நீதிமன்றம் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

மாலை மலர்

கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில், செல்போன் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடத் தாமதமாக மூடியதாகக் கூறி, தந்தை ஜெயராஜையும் அவரது மகன் பென்னிக்ஸையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை என்ற பெயரில் போலீசாரால் முன்னெடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதலில், படுகாயமடைந்த இருவரும் ஜூன் 22 மற்றும் 23 என அடுத்தடுத்த தேதிகளில் உயிரிழந்தனர். காவல்துறையால் தந்தை, மகன் இருவரும் அடித்தேக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது. குற்றத்தில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், மற்ற காவலர்கள் முருகன், சாமிதுரை, முத்துராஜ், செல்லத்துரை, வெயில்முத்து, தாமஸ் ஆண்டனி உள்ளிட்ட 9 பேரும் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று வழக்கில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது மதுரை மாவட்ட நீதிமன்றம். அதன்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 காவலர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த வாரம் திங்கள்கிழமை (மார்ச் 30) தண்டனை விவரங்கள் வழங்கப்பட உள்ளன.