தமிழக செய்திகள்

சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது- சபாநாயகர் முடிவுக்கு சசிகலா எதிர்ப்பு

இன்றைக்கு சம்பந்தப்பட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது நடைமுறைக்கு உகந்ததாக தெரியவில்லை.

அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் சசிகலா சமூக வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு சபாநாயகர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற சபாநாயகர் தமிழக சட்டமன்ற பேரவையின் மாண்பை, அதன் மதிப்பு மிக்க சிறப்பை தொடர்ந்து காப்பாற்றிட வேண்டும். புதிதாக அமைந்த அரசுக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஆதரவு அளித்த அ.தி.மு.க.வை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 25 மற்றும் 26-ந்தேதிகளில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதை உடனடியாக சபாநாயகரும் ஏற்றுக்கொண்டு விட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அந்த தொகுதிகளை காலியானதாக அன்றே அறிவிப்பும் செய்து விட்டநிலையில், இன்றைக்கு சம்பந்தப்பட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது நடைமுறைக்கு உகந்ததாக தெரியவில்லை. இது எத்தகைய பலனை அளிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இதுபோன்ற விஷயங்களை தகுந்த சட்ட வழிகாட்டுதலுடன் அணுகுவது தான் சரியான நடவடிக்கையாக அமையும். இது போன்ற நடவடிக்கைகள் தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்.