சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு பாஜகவில் இணைத்த நடிகர் சரத்குமாருக்கு அந்த கட்சியில் முக்கியமான பொறுப்புகள் எதுவும் இதுவரை வழங்கப்படாமலேயே உள்ளது.
தற்போது பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியில் சரத்குமார் இருந்து வருகிறார்.
ஆலோசனை
முக்கியமான பொறுப்புகள் வழங்காத காரணமாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று ஆதரவாளர்களுடன் சரத்குமார் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு பேட்டி அளித்த அவர், பா.ஜ.க-வில் எனக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படாதது என்னுடன் பயணிப்பவர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனை சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இன்று சந்தித்தார்
இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனை சரத்குமார் இன்று சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நேற்று நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வேண்டுகோள் கடிதம் கொடுத்துள்ளோம். அதை பரிசீலனை செய்வதாக அவர் தெரிவித்து உள்ளார்.
ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இன்று நான் கோவை செல்கின்றேன். தன்னை அழைத்தால் பியூஸ் கோயலை சந்திப்பேன்.
திருப்தியோடு தான் வந்து தற்போது கடிதம் கொடுத்து விட்டு செல்கின்றேன். நீங்கள் சொல்வதெல்லாம் நியாயம்தான். நான் அதை பரிசீலனை செய்கின்றேன் என்று தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே ஆதங்கம் என்று சொல்லியாச்சு அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.