தமிழக செய்திகள்

தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் - முதலமைச்சர் விஜய்

தியாகி சங்கரலிங்கனார் இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்! என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நமது மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

தனது கொள்கையிலும், தமிழ் மண்ணின் தன்னாட்சிப் பெருமையிலும் எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல், உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT