தமிழக செய்திகள்

சஞ்சு சாம்சன் அபார சதம்: மும்பைக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே

சஞ்சு சாம்சன் 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 101 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 33-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சிஎஸ்கே அணியின் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் 14 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சர்பராஸ் கான் 14 ரன்னிலும், ஷிவம் துபே 5 ரன்னிலும், டெவால்டு பிரேவிஸ் 21 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் சஞ்சு சாம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்தில் அரைசதம் விளாசினார். கார்த்திக் சர்மா 18 ரன்களில் வெளியேறினார். ஓவர்ட்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 18-வது ஓவரின் கடைசி பந்தில் 7 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

19-வது ஓவர் முடிவில் சஞ்சு சாம்சன் 85 ரன்கள் அடித்திருந்தார். கடைசி ஓவரை கிரிஷ் பகத் வீசினார். முதல் பந்து, 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சதம் விளாசினார். அவர் 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழக்கால் இருக்க சிஎஸ்கே 207 ரன்கள் குவித்துள்ளது.

இந்த தொடரில் சஞ்சு சாம்சனின் 2-வது சதம் இதுவாகும்.