வீட்டின் பூட்டை உடைக்காமல் மர்மநபர் சாவி போட்டு பூட்டை திறந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (47). இவர் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்குச் சொந்தமான லாரியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், தனஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பழனிவேல் வேலைக்குச் சென்றுவிட்டார். அவரது மகள் தனஸ்ரீ வடுகப்பட்டி பள்ளிக்குச் சென்றார். இதற்கிடையே செல்லம்மாள் வீட்டைப் பூட்டிவிட்டு சங்ககிரியில் உள்ள வங்கிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். பின்னர் மாலை 3 மணியளவில் மகளிர் சுயஉதவிக்குழு தொடர்பாக அதன் கிடையூர் கூட்டுறவு வங்கிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.
தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்து வரும் மகளை அழைத்து வருவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சங்ககிரி புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றார். அங்கிருந்து மகளை அழைத்துக்கொண்டு, பேருந்து நிலையம் அருகே உள்ள தனது தோழி வீட்டிற்குச் சென்றார். பின்னர் அங்கு வந்த பழனிவேலும் அவர்களுடன் பேசிவிட்டு மாலை 6 மணியளவில் மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது வீட்டின் கதவு அருகே மகளின் தோடு ஒன்று கிடந்துள்ளது. இதனை எடுத்த பழனிவேல் மனைவியிடம் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த செல்லம்மாள் வீட்டிற்குள் இருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 3½ பவுன் ஆரம், 5 பவுன் நெக்லஸ், ½ பவுன் எடையுள்ள 3 மோதிரங்கள், 1 பவுன் எடையுள்ள 2 செட் தோடுகள், ¼ பவுன் மாடல் 2 செட், 1 பவுன் எடையுள்ள 10 தங்கக் காசுகள், ½ பவுன் தங்கக் காசு ஒன்று, ¼ பவுன் தங்கக் காசுகள் 2 என மொத்தம் 23¼ பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.11 லட்சத்து 62 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனிவேல் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக நேற்று நள்ளிரவு கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்துச் சென்றனர்.
இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி .கேமரா பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைக்காமல் மர்மநபர் சாவி போட்டு பூட்டை திறந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.