குப்பனூர் பைபாஸ் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பில் பயங்கரமாக மோதியது.
சேலம் மாவட்டம் சங்ககிரி தாமஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பிரதாப் (19). இவரது நண்பரான பழைய எடப்பாடி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் சபரிகிரி (16).
இவர்கள் 2 பேரும் தீபாவளி தினமான நேற்று இரவு 7 மணியளவில் பிரதாப்புக்கு சொந்தமான விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரதாப் ஓட்டினார். சபரிகிரி பின்னால் அமர்ந்திருந்தார்.
அப்போது குப்பனூர் பைபாஸ் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த பிரதாப் மற்றும் சபரிகிரி ஆகிய இருவருமே தங்களது குடும்பங்களில் ஒரே மகன்கள் ஆவர். இரு குடும்பங்களிலும் தலா ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், குடும்பத்தின் ஒரே மகன்களான இருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய நேரத்தில் தங்களது ஒரே மகன்களை இழந்து இரு குடும்பத்தினரும் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. இந்த சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.