திண்டுக்கல்லில் இன்று பிரபல தொழிலதிபர் ரத்தினம் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் வசித்து வருபவர் ரத்தினம். பிரபல தொழிலதிபர். இவருக்கு திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வந்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக கனிம வள முறைகேடு விவகாரத்தில் சென்னை சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் பேரில் ஏற்கனவே இவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2000 நோட்டுகள் அதிகளவு வைத்திருந்ததாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருடன் ஆடிட்டர் பிரேம்குமார், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன் பின் வழக்கில் இருந்து தொழிலதிபர் ரத்தினம் வெளியே வந்தார். அதன் பிறகும் ரத்தினம் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமாக உள்ள நபர்களின் இடங்களிலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் 4-வது முறையாக இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 போலீசார் அவரது வீட்டுக்கு வந்தனர். ஜி.டி.என். சாலையில் உள்ள 2 வீடுகள், அலுவலகம் ஆகியவற்றில் அவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல்குவாரி முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். 4 ஜீப்புகளில் வந்த 20 போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து செல்வதற்காக பிரிண்டர் சாதனைத்தையும் கொண்டு வந்தனர். இந்த சோதனை குறித்த தகவல் அறிந்ததும், அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திரண்டனர்.
தொழிலதிபர் ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி சென்னையில் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.