தமிழக செய்திகள்

மணல் குவாரி முறைகேடு: 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திமுக ஆட்சி

கடந்த தி.மு.க. ஆட்சியில் 2023-ம் ஆண்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மணல் திருட்டு தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் மணல் குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள்

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களை நேரில் வரவழைத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்து அதிரடி விசாரணை நடத்தினர்.

இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத் துறையினர் அப்போதைய தமிழக அரசுக்கு கடிதமும் அனுப்பினார்கள்.

ஆனால் அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே இருந்து வந்தது.

லஞ்ச ஒழிப்பு போலீசார்

இந்த நிலையில் இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது கையில் எடுத்துள்ளனர்.

மணல் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த பகுதிகளில் மிகவும் பிரபலமான தொழில் அதிபர்களாக திகழ்ந்துவரும் மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி

திருச்சியில் மொத்தம் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் உள்ள பொதுப் பணித்துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் முகாமிட்டு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர மேலும் 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹேம சித்ரா தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தில் உள்ள மணல் குவாரி அதிபர் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் அவரது உறவினர் ஒருவர் வீடு என 2 இடங்களில் இன்று காலை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 6 மணிக்கு தொடங்கி பல மணி நேரம் நீடித்தது.

இதேபோன்று ஏம்பலில் உள்ள குமாரராஜா வீட்டிலும், குழந்தைதான்பட்டியில் மணல் குவாரி அதிபர் கரிகாலன் இல்லத்திலும், புதுக்கோட்டையில் ஒப்பந்ததாரர் ஒருவர் வீட்டிலும் என மொத்தம் 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஆவணங்கள்

போலீசார் தனிதனி குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது, வீடு அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியே செல்லவோ, வெளிநபர்கள் உள்ளே வரவோ தடை விதிக்கப்பட்டு கதவுகளை பூட்டி சோதனை நடத்தினர். வீடு மற்றும் அலுவலகங்களில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சல்லடை போட்டு தேடினர்.

இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை முடிந்த பிறகு என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவரும்.

திண்டுக்கல்

தொழில் அதிபர் ரத்தினம் திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வந்ததில் இவர் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2000 நோட்டுகள் அதிகளவு வைத்திருந்ததாக இவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருடன் ஆடிட்டர் பிரேம்குமார், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப் பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து தொழில் அதிபர் ரத்தினம் வெளியே வந்தார். அதன் பிறகும் ரத்தினம் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமாக உள்ள நபர்களின் இடங்களிலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

4-வது முறை

இந்நிலையில் 4-வது முறையாக இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 போலீசார் அவரது வீட்டுக்கு வந்தனர். ஜி.டி.என். சாலையில் உள்ள 2 வீடுகள், அலுவலகம் ஆகியவற்றில் அவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

4 ஜீப்புகளில் வந்த 20 போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து செல்வதற்காக பிரிண்டர் சாதனைத்தையும் கொண்டு வந்தனர். இந்த சோதனை குறித்த தகவல் அறிந்ததும், அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திரண்டனர்.

த.வெ.க.வில் மகன் இணைந்தார்

தொழில் அதிபர் ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT