சேலம்:
எஸ்.எஸ்.சி.எனப்படும் இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றை நடத்தி தகுதியான நபர்களை அரசு பணிக்கு தேர்வு செய்கிறது.
அந்த வகையில் தொழில் நுட்பம் சாராத அரசு அலுவலர்களை தேர்வு செய்வதற்கான மல்டி டாஸ்கிங் தேர்வு 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி. வெளியிட்டது.
இதனை தொடர்ந்து தாள்-1 எழுத்துத்தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்றது.
இந்த தேர்வு மையத்தில் 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு, பட்டம், முதுநிலை பட்டம் படித்த ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இதையடுத்து தேர்விற்குரிய விடைகுறிப்புகள், விண்ணப்பதாரர்கள் எழுதிய தாள்-1 விடைத் தாள் ஆகியவை வெளியிடப்பட்டது. விடைத்தாளை பலர் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில் இத்தேர்வுக்குரிய முடிவுகள் நாளை மறுதினம் (28-ந்தேதி) வெளியிடப்படுகிறது.
அன்று தேர்வர்கள் எஸ்.எஸ்.சி. இணையதளத்தில் தங்களுடைய பதிவேண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மேலும் மதிப்பெண் சான்றிதழை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். இந்த தகவலை இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.