தமிழக செய்திகள்

குறைந்த வட்டியில் கடன் தருவதாக டிரைவரிடம் ரூ.1 லட்சம் மோசடி

சேலம் அருகே குறைந்த வட்டியில் கடன் தருவதாக டிரைவரிடம் மர்மநபர் ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் சின்ன வீராணம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 31).  டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 

இவரிடம் போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் தான் தனியார்  நிதி நிறுவனத்தை சேர்ந்தவர் என்றும் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும் தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய சரவணன் தனக்கு ரூ.3.50 லட்சம் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் உடனடியாக கடன் தொகையை நிதி நிறுவனம் மூலம் பெற்று தருவதாகக் கூறி ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, போன்றவற்றை  வாட்ஸ் அப்பில் அனுப்ப சொல்லியுள்ளார். 

மேலும் ரூ.3.50 லட்சத்திற்கு முதல் மாத தவணை தொகை மற்றும் டாக்குமெண்ட் கட்டணம் ரூபாய் 92,400 வங்கி கணக்கில் செலுத்த சொல்லியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சரவணன் அந்த பணத்தை தனது வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு அந்த நபரின் செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதேபோல் சேலம் அழகாபுரம் பெரிய புதூர் ரோடு, பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). 

இவரது செல்போனுக்கு கே.ஒய்.சி. தகவல்களை பதிவிறக்கம் செய்ய சொல்லி ஒரு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.  செந்தில்குமார் அந்த இணைப்பில் சென்றபோது வங்கி தகவல்கள் மற்றும் ஓ.டி.பி.  தகவல்களை தெரிவித்துள்ளார்.அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.69,900 எடுக்கப்பட்டு விட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.