சேலம்:
சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த 60 வார்டுகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. தி.மு.க. 498 வார்டுகளிலும், கூட்டணி கட்சிகள் 12. வார்டுகளிலும் போட்டியிட்டது. இவர்கள் தவிர பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் தனித்து போட்டி யிட்டது.
இந்த தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை வார்டு களில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. 60 வார்டுகளிலும் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. 7 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் மகன் ஜனார்த்தனன் 22-வது வார்டில் போட்டியிட்டார்.
ஓட்டு எண்ணிக்கையின் போது தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியாக இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு வேட்பாளர் பெருமாளை விட 979 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் முதன் முதலாக மாநகராட்சி கவுன்சிலராகிறார்.
இவர் தவிர 8-வது வார்டில் விடுதலை சிறுத்தை வேட்பாளர் ஜெயச்சந்திரனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். 24-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரா வெற்றி பெற்றார். இங்கு போட்டியிட்ட கம்யூனிஸ்டு வேட்பாளர் நிர்மலா தோல்வி அடைந்தார். 25-வது வார்டில் போட்டியிட்ட சசிகலா தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை தோற்கடித்துள்ளார்.
36-வது வார்டில் பகுதி செயலாளர் யாதவமூர்த்தி வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் சுரேசை தோற்கடித்துள்ளார். 49-வது வார்டில் போட்டியிட்ட மோகன பிரியா காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பலட்சுமியை தோற்கடித்துள்ளார்.
60-வது வார்டில் வரதராஜ், கம்யூனிஸ்டு வேட்பாளர் சேகரை தோற்கடித்துள்ளார். இதன் மூலம் சேலம் மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 7 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.