சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் என்ற உதயகுமார் (44), பிரபல ரவுடியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை, மோசடி, வழிப்பறி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
நிபந்தனை ஜாமீன்
இந்தநிலையில் டேவிட் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நில ேமாசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற டேவிட் அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களாக கையெழுத்து போட்டு வந்தார்.
வழக்கம் போல நேற்றும் காலை 11 மணியளவில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்ட டேவிட் ஸ்கூட்டரில் சேலம் ஜங்சன் புதுரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் பைசல் என்பவரும் உடன் இருந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர் திசையில் வந்த 5 பேர் கும்பல் டேவிட்டை சரமாரியாக சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. அப்போது அங்கிருந்து தப்பியோடிய டேவிட்டை ஓட ஓட விரட்டிய அந்த கும்பல் கழுத்து, தலை உள்பட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி சாய்த்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த டேவிட் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு காட்டு பகுதி வழியாக தப்பியோடியது.
தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கர் மற்றும் சூரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று டேவிட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் மற்றும் வீராணம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (23), காத்தாயன் என்ற கார்த்தி (23), கருவாடு ரகு (25), கீரி மணிகண்டன் (27), மோகன் (25), சுலைமான் (24), பனமரத்துப்பட்டியை சேர்ந்த அருண் (25) ஆகிய 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடியான ஜான் (35) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்துறை அருகே மனைவியுடன் காரில் சென்ற போது காரை வழிமறித்து ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. ஜான் கொலைக்கு நேற்று கொலையான டேவிட் பணம் மற்றும் பல்வேறு உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. அதனை அறிந்த ஜான் ஆதரவாளர்கள் டேவிட்டை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்தனர். இதனை அறிந்த சேலம் மத்திய சிறையில் உள்ள ஒரு பிரபல ரவுடியும் டேவிட்டை கொலை செய்ய ஜான் ஆதரவாளர்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது.
சேலம் சிறையில் உள்ள பிரபல ரவுடியின் திட்டத்தின் படி இந்த கொலை திட்டத்தை ஜான் ஆதரவாளர்கள் நிறைவேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசாரிடம் சிக்கிய ஜானின் ஆதரவாளரான 7 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர் டேவிட்டின் உடல் நேற்றிரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி டேவிட்டின் வீடு மற்றும் இறுதி சடங்கு நடைபெறும் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.