படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய டேவிட்டை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சேலம் ஜாகீர் சின்ன அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (வயது 45) .இவர் மீது கொலை வழக்கு உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி பட்டியலிலும் உள்ளார்.
இந்த நிலையில் சேலம் குரங்குசாவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நிலம் தொடர்பான வழக்கில் நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் இன்று காலை டேவிட் கையெழுத்து போட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் சேலம் ரெயில்வே ஜங்ஷன் மேம்பால பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென அவரது தலையில் சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த அவர் மோட்டார் சைக்கிளில இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
ஆனாலும் துரத்தி சென்ற அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் நிலை குலைந்த டேவிட் சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் இருந்த கல் மீது விழுந்தார்.
அப்போதும் பின் தொடர்ந்த அந்த கும்பல் மேலும் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்ததும் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. பட்டப்பகலில் சாலையோரம் நடந்த கொடூர சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனைப் அறிந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் அங்கு ஏராளமானார் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது . இதற்கிடையே மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கர் மற்றும் சூரமங்கலம் போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய டேவிட்டை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரையில் உருண்டு கதறி அழுதனர்.
இந்த சம்பவத்தால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு உருவானது. தொடர்ந்து டேவிட் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் ஏராளமான அங்கு திரண்டு உள்ளதால் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதையொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
டேவிட் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது முன் விரோதம் காரணமாக இந்த கொடூர கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் அவர்களை அடையாளம் காணும் பணியில் அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சேலத்தில் பட்டபகலில் சாலையில் சென்றவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் இன்று அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.