சேலம் மார்க்கெட்டுகளுக்கு சின்ன வெங்காயம் வரத்து 60 சதவீதமாக குறைந்துள்ளதால் அதன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, எடப்பாடி, தலைவாசல், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், காடையாம்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த சின்ன வெங்காயத்தை உழவர் சந்தைகள் மற்றும் வெளி மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
இது தவிர நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் இருந்தும் சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு சின்ன வெங்காயம் வரத்து 60 சதவீதமாக குறைந்துள்ளதால் அதன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக சேலத்தில் உள்ள 4 உழவர் சந்தைகளுக்கும் 15 டன் வரை சின்ன வெங்காயம் வந்த நிலையில் தற்போது அதன் வரத்து 9 டன்னாக குறைந்துள்ளது.
உழவர் சந்தைகளில் கடந்த மாதம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 55 முதல் 65 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 90 முதல் 95 ரூபாய் வரை விற்பனையானது. இந்த நிலையில் இன்று சேலம் மாநகர உழவர் சந்தையில் 100 முதல் 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எடப்பாடி உழவர் சந்தையில் மாவட்டத்தில் அதிக பட்சமாக 125 ரூபாய்க்கு சின்ன வெங்காயம் விற்பனையானது, சேலம் மாநகர வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 130 ரூபாய் முதல் அதிக பட்சமாக 170 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதே போல சேலம் மாவட்டம் தலைவாசல் காய்கறி மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து 50 சதவீதமாக சரிந்துள்ளது. இதனால் அங்கு 3-ம் தர வெங்காயம் 100 ரூபாய்க்கும், முதல் தர சின்ன வெங்காயம் அதிக பட்சமாக 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குறைந்த அளவிலேயே சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ ரூ. 10 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் நடப்பாண்டில் சின்ன வெங்காயம் சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர். இதனால் சின்ன வெங்காயம் வரத்து வழக்கத்தை விட பாதியாக குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விலை தற்போது 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களிலும் விலை குறைய வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.