தீபாவளி பண்டிகையையொட்டி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இதில் அதிகாலை நேரத்தில் ஆடு, மாடுகள் சந்தை நடைபெறும். பின்னர் காலை 11 மணிக்கு மேல் மளிகை பொருட்கள், காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மாவட்டம் தொப்பூர், பென்னாகரம் ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்கவும், வாங்கவும் வருவார்கள். இதே போல் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் வந்து அதிகளவில் ஆடு, மாடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் இன்று நடந்த சந்தைக்கு அதிகளவில் விவசாயிகள் ஆடுகள், மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று இரவு முதல் சந்தைக்கு விடிய, விடிய சரக்கு ஆட்டோக்களில் ஆடு, மாடுகளை கொண்டு வந்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியளவில் சந்தை தொடங்கியது. தீபாவளி பண்டிகையையொட்டி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ. 14 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 18 ஆயிம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதிகளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். சுமார் ரூ. 1கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.