சாலமன் பாப்பையாவின் இயற்பெயர் சுந்தரம் சாலமன் பாப்பையா. இவர் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-வது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்தார்.
சாலமன் பாப்பையா பள்ளியில் படிக்கும்போது பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசினார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் போன்றோரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றினார். குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரது பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் போன்றோரது சொற்பொழிவுகளைக் கேட்டும், தொடர் வாசிப்புப் பயிற்சியாலும், தன்னை ஒரு பேச்சாளராக வளர்த்துக் கொண்டார்.
வகுப்பறையில் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் கற்பித்த பேராசிரியர், வகுப்பறைக்கு வெளியே அதே இலக்கியத்தை சாதாரண மக்களிடம் எடுத்து செல்லத் தொடங்கினார்.
முதல் மேடைப் பேச்சு 1961-ல் புதுக்கோட்டையில் நிகழ்ந்தது. பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா? என்ற விவாதத் தலைப்புகளில், புதுமைக் கவிஞனே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பட்டிமன்ற நிகழ்வுகள் பலவற்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டார். பட்டிமன்ற நடுவராக உயர்ந்தார். பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற தன் குழுவினருடன் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை எனப் பல வெளிநாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். 7000-க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தினார்.
சாலமன் பாப்பையா பணிகளுக்கு இடையே இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதினார். மாநாட்டு மலர்கள் பலவற்றிலும் அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குங்குமம், குமுதம் போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இவருடைய 'உரைமலர்கள்' நூல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது.
சாலமன் பாப்பையா புறநாநூறு பாடல்கலை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டார். அகநாநூறு மூன்று தொகுதிகளாக உரை எழுதினார்.
சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் அந்த வடிவத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்குத் தனித்த இடம் இருக்கிறது.
ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சி வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது.
அந்த மாற்றத்தின் முக்கிய முகமாக சாலமன் பாப்பையா இருந்தார். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின.
சாலமன் பாப்பையாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அவரது மொழிநடை. தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை இருந்தாலும், மேடையில் அதை வெளிப்படுத்தும்போது மிகக் கடினமான இலக்கிய மொழியை அவர் தேர்வு செய்வதில்லை.
திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ, கம்பராமாயணத்தையோ எடுத்துக்கொண்டாலும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து விளக்குவார்.
அதற்குள் மதுரைக்கே உரிய இயல்பான பேச்சுத்தமிழும் நகைச்சுவையும் கலந்து வரும். இதன் காரணமாக இலக்கியம் படிக்காதவர்களும் அவர் சொல்லும் இலக்கியக் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வகுப்பறைகளுக்குள் இருந்த தமிழை கடைக்கோடி மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்.
இவரது மனைவி ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த 2025-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.