லஞ்சம், ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக ஒரு கட்சி உருவானது என்றால், அது அ.தி.மு.க. மட்டும் தான் என்று சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறி உள்ளார். இது குறித்து அவர் அந்த வரலாற்று சம்பவத்தை இளம் தலைமுறையினருக்கு விளக்கி கூறி இருப்பதாவது:-
1967-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட போஸ்டரால் கிடைத்த அனுதாப ஓட்டுகளே தி.மு.க.வை வெல்ல வைத்து, அண்ணாவை முதல்வராக்கியது. அண்ணா மறைவுக்கு பிறகு எம்.ஜி.ஆர்.தான் கருணாநிதியை முதல்வராக்கினார். 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மீண்டும் கருணாநிதியை முதல்வராக்கியதும் அவர் தான்.
ஆனால், இந்த வெற்றிக்குப் பிறகு மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆருக்கு பதிலாக மு.க.முத்து தலைமையேற்று ஊர்வலம் நடத்தியதை கண்டு ரசிகர்களுக்கு ரத்தம் கொதித்தது. எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றுவதற்கு கிளைக்கழகச் செயலாளர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.
இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் தாம்பரம் பாலு வீட்டில் ஒன்றுகூடி ஆலோசனை செய்தோம். எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு பிரத்யேக கொடி உருவாக்கும் ஆலோசனை நடந்தது. எம்.ஜி.ஆருக்கு ராசியான தாமரைப்பூவை கொடியில் வைக்கலாம் என்ற என் ஆலோசனை ஏற்கப்பட்டது. அதேபோல் ‘தென்னக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். புகழ்பரப்பும் கலைக்குழு' அமைக்கவும் முடிவெடுத்தோம்.
எம்.ஜி.ஆரிடம் அனுமதி கேட்பதற்கு 1972-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி அன்று சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆலோசனைக் கூட்டம், ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் இன்றைய அ.தி.மு.க. தலைமையகமான சத்யா திருமண மண்டபத்தில் நடந்தது.
இதனை அறிந்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ஒரு தந்திரம் செய்தார். அன்றைய புதுச்சேரி முதலமைச்சர் பரூக் மரைக்காயர் மூலம் எம்.ஜி.ஆருடன் சமாதானம் பேசினார். இந்த கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். ஒரு தெளிவான முடிவுடன் வந்தார். ''நீங்கள் அனைவரும் ஒரு முடிவுடன் இருக்கிறீர்கள். ஆனால், அண்ணா கண்ட இருவர்ணக்கொடிதான் நமது அடையாளம். தாய்க்கழகமா, சேய் மன்றமா என்று கேட்டால், நான் தாய்க்கழகம் தான் வேண்டும் என்பேன்…'' என்று அழுத்தமாக பேசி ரசிகர்கள் கோரிக்கைகளை நிராகரித்து விட்டார். அரங்கமே நிசப்தமாகிவிட்டது.
அனைவரும் அதிர்ச்சியில் இருந்தாலும் நான் சுதாரித்துக்கொண்டு மேடையில் இருந்து இறங்கி வந்து எம்.ஜி.ஆரிடம், ‘‘எம்.ஜி.ஆர். மன்றங்களை க்ளோஸ் செஞ்சிட்டீங்க” என்றேன். ஏனென்று கேட்டதும், கட்சியில் எம்.ஜி.ஆருக்கும், ரசிகர் மன்றங்களுக்கும் எதிராக நடக்கும் அத்தனை சூழ்ச்சி, துரோகங்களையும், சென்னையில் மட்டும் 48 மன்றங்கள் மூடப்பட்டதையும் கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் மளமளவென கொட்டினேன். நான் சொன்னதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கிளம்பிவிட்டார்.
எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றதும் நான் கூறிய தகவல்களின் உண்மைத்தன்மையை விசாரித்தார். எல்லாமே முழு உண்மை என்றதும் அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக ஆர்.எம்.விரப்பனிடம் கால்ஷீட் தேதிகளை கேட்டறிந்து, அக்டோபர் 8-ந்தேதி 2 பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தேதி கொடுத்தார்.
அதன்படி, திருக்கழுக்குன்றம், சென்னை லாயிட்ஸ் ரோடு கூட்டங்களில் பேசிய எம்.ஜி.ஆர்., ‘நான் தான் தி.மு.க., தி.மு.க.தான் நான். கிளைக்கழகச் செயலாளர்கள் முதலமைச்சர் வரை அனைவரும் சொத்துக்கணக்கு காட்ட வேண்டும்' என்று உரிமைக்குரல் எழுப்பினார். இதையடுத்து எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து 10-ந்தேதி நீக்கப்பட்டார்.
கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி தமிழகத்தை அதிரவைத்தது. இதையடுத்து, அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம் பதிவு செய்யப்பட்ட அ.தி.மு.க. அக்டோபர் 17-ந்தேதி உருவானது. இதுதான் அ.தி.மு.க. உருவான வரலாறு.
இதுகுறித்து ஆர்.எம்.வீரப்பன், ‘‘சைதை துரைசாமி மட்டும் அமைதியாக இருந்திருந்தால் அன்றைய தினம் அ.தி.மு.க. உருவாகியிருக்காது'' என்று பல இடங்களில் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதனாலே நான் எம்.ஜி.ஆரின் நம்பிக்கையான தளபதியாக மாற முடிந்தது என்பதை எண்ணியெண்ணி இன்றும் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.