சடையாண்டி கோவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது 
தமிழக செய்திகள்

ஆண்டிபட்டியில் சடையாண்டி சாமி கோவிலில் 120 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்- ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு

ஆண்டிபட்டியில் பழமையான சடையாண்டி கோவிலில் 120க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

விழாவை காணவும், அன்னதானத்தில் பங்கேற்கவும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

பழமையான கோவில்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை கரையோரம் சடையாண்டி சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத கடைசி வளர்பிறையில் நள்ளிரவில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தருவார்கள். சடையாண்டியிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறிய பின் காணிக்கையாக ஆடுகளை வழங்குவது வழக்கம்.

அதன்படி நேற்று இரவு காணிக்கையாக பக்தர்கள் 120க்கும் மேற்பட்ட ஆடுகளை வழங்கினர். இரவு 10 மணிக்கு தொடங்கிய திருவிழா விடிய விடிய வழிபாடு நடைபெற்றது.

அன்னதானம்

முதலில் சடையாண்டி சாமிக்கு உப்பு, சீனி இல்லாத பொங்கல் தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டது. அதன்பின் வெள்ளை நிறம் இல்லாத கருப்பு முடி உள்ள ஆடு பலியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடுகள் ஒவ்வொன்றாக பலியிடப்பட்டு அந்த இறைச்சி மூலம் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. மின் விளக்கு வெளிச்சம் எதுவும் இல்லாமல் பரம்பரை பரம்பரையாக எவ்வாறு விழா கொண்டாடப்பட்டதோ அதேபோல பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் விழா நடைபெற்றது.

பக்தர்கள்

அசைவ உணவு தயாரிக்கப்பட்டதும் அது சடையாண்டிக்கு படையலாக போடப்பட்டு பூஜைகள் நடந்தது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று உணவு அருந்தி சென்றனர். விழாவை காணவும், அன்னதானத்தில் பங்கேற்கவும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

காலம் காலமாக நடத்தப்படும் இந்த விழாவில் பக்தர்கள் ஒற்றுமையுடன் பங்கேற்று வழிபாடு நடத்துவதாக நாட்டாமைகள் செல்வம், அழகுதுரை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT