கடந்த கால தேர்தலுக்கும், தற்போது நடைபெறுகிற இடைத்தேர்தலுக்கும் என்ன வித்தியாசம் என்பதை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
தி.மு.க. சட்டத்துறை சார்பில் செங்கல்பட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர்கள், சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
மதுராந்தகம் சட்டமன்ற தேர்தல் என்பது மிகமிக முக்கியமான தேர்தல் இதற்கு முன்னால் நடைபெற்ற இடைத்தேர்தல் எல்லாம் வேறு வேறு காரணங்களுக்காக நடைபெற்றது, சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்துவிட்டால் இடைத்தேர்தல் வரும். இல்லையென்றால் அதை விட உயர்ந்த வேறொரு பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் ராஜினாமா செய்யும் நிலையில் அங்கு இடைத்தேர்தல் வரும். ஆனால் தற்பொழுது இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் அவ்வாறு நடக்கவில்லை.
முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் குறிப்பிட்டதை போல ஜனநாயகம் சாகடிக்கப்பட்டுவிட்டதால் இந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதனை நமது வழக்கறிஞர்கள் மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். இந்தத் தேர்தல் என்பது எவ்வளவு முக்கியமானது. கடந்தகால தேர்தலுக்கும், தற்போது நடைபெறுகிற இடைத்தேர்தலுக்கும் என்ன வித்தியாசம் என்பதை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
இடைத்தேர்தல் நடைபெறுகின்ற இந்த 2 தொகுதிகளுமே தி.மு.க.விற்கு சாதகமான தொகுதிகள் தான் தற்பொழுது நடைபெறுகின்ற ஆட்சி தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் இதுவரை நிறைவேற்றாமல் ஓட்டு போட்ட நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டார்கள் என்று வாக்காளர்கள் கொந்தளித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியின்போது பெற்ற நன்மைகளை தவிர, புதிதாக வந்த த.வெ.க. ஆட்சி எந்தத் திட்டத்தையும் புதிதாக கொண்டு வரவில்லை என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், இவையெல்லாம் நமக்கு சாதகமாக நிச்சயம் அமையும்.
இந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் நிச்சயம் தமிழ் நாட்டில் ஜனவரி மாதத்திற்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும். எனவே இந்த வரலாற்று வெற்றி கிடைக்க நாம் இடைவிடாது பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.