கைது 
தமிழக செய்திகள்

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி: தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது

தங்கம் ஒப்படைக்கப்படும் என நம்பிச் சென்ற அன்மோல், அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்தார்.

குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார்.

குறைந்த விலைக்கு தங்கம்

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். தங்க வியாபாரியான இவர் தனது உறவினர் நமீத் என்பவருடன் இணைந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 17-ந்தேதி, நமீத் தனது உறவினர் அன்மோல் ஜெயினுக்கு போன் செய்து, குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும், அங்கு சென்று தங்கம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறி உள்ளார்.

இதனையடுத்து, தங்கம் வாங்குவதற்காக ரூ.63 லட்சத்தை தனது ஊழியர் ராஜேந்திர ஜெயின் மூலம் எழும்பூர் பவுண்டன் பிளாசாவிற்கு அன்மோல் ஜெயின் வரவழைத்து உள்ளார்.

ரூ.63 லட்சம்

அப்போது, குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார். சக்தியும் அவரது தந்தை சாந்தகுமாரும் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்திருப்பதாகவும், பெரிய அளவில் தங்கம் வியாபாரம் செய்வதாகவும் அன்மோல் ஜெயினிடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து , பவுண்டன் பிளாசா அருகே வைத்து 63 லட்சம் ரூபாயை அன்மோல் ஜெயின் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிய சக்தி, “மேலே சென்று பணத்தை வைத்து விட்டு, தங்கத்தையும் ரசீதையும் எடுத்து வருகிறேன்” எனக் கூறி விட்டு சென்று உள்ளார்.

சிறிது நேரத்தில், சாந்தகுமார் ஒரு போன் அழைப்பு வந்ததாக நாடகமாடி, அன்மோல் ஜெயினை ஜெமினி பாலம் அருகே உள்ள ஸ்ரீமிட்டாய் உணவகத்திற்கு வரச் சொல்லி உள்ளார்.

அதிர்ச்சி

அங்கு தங்கம் ஒப்படைக்கப்படும் என நம்பிச் சென்ற அன்மோல், அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்தார்.

மீண்டும் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்மோல் ஜெயின், இது பற்றி எழும்பூர் போலீசில் புகார் அளித்தார்.

கைது

இது பற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் சாந்தகுமார், ஸ்ரீராம், ராம் குமார் மற்றும் உதய்கிரண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முக்கிய குற்றவாளியான சக்தி தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.